கற்பூரவல்லி பயன்கள்
கற்பூரவல்லி - Karpooravalli Health Benefits
கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் கற்பூரவல்லியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.
ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.
கற்பூரவல்லி பயன்கள்
இருமல், சளி போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த இலையின் சாற்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி பிரச்னை வராது. தலைவலி இருக்கும் சமயத்தில் கற்பூரவல்லி சாற்றையும் சிறிதளவு நல்லெண்ணெய்யும் கலந்து தலையில் பற்று போட்டால் வலி குறையும், குழந்தைகளுக்கு இந்த இலை சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கலாம். வாந்தி, அஜீரணம் பிரச்னைகள் இருந்தால் தீர்வு கிடைக்கும்.
கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது ஆஸ்டியோபொராஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
புற்று நோய் உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுகிறது. மார்பக புற்று நோய் மற்றும் பிரஸ்ட்ரேட் புற்று நோயுக்கு கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா – 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்று நோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேரையர் குணபாடம்
"கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே"
வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
தாவரப்பெயர்- COLEUS AROMATICOS.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிடுவதால் இதயத்துடிப்பு கட்டுப்படுத்தப்படும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
சில கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும், நெஞ்சு,கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும், ஜுரம் சீக்கிரம் நீங்கும்.
தசைகள் சுருங்கும் பிரச்னை உள்ளவர்கள் இந்த இலைகளை 2 அல்லது 3 தினமும் சாப்பிடலாம். கார்ப்பு சுவையுடைய இந்த இலைகளில் மருத்துவ குணங்கள் அதிகம். அதுமட்டும் இல்லை இதில் பொட்டாசியம், புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,பி6 அடங்கியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த செடியின் இலைகளை சாப்பிடலாம். எலும்பு வளர்ச்சிக்கு உதவும். சரும பிரச்னைகளுக்கும் இந்த இலை மருந்தாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுவதுண்டு.
கற்பூரவள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.